அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


>>பள்ளி வரலாறு

பழையக் கட்டடம்

1905 ஆண்டில், ஏறக்குறைய 20 மாணவர்களையும் ஓர் ஆசிரியரையுங்கொண்டு ஓர் இல்லத்தில் இப்பள்ளித் தொடங்கப்பட்டது. இவ்வில்லமும் அதைச் சார்ந்த நிலமும் வழிபாடு செய்யும் நோக்கத்திற்காகவே ஒரு கொடை நெஞ்சரால் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. பள்ளி நாட்களில் பாடங்கள் கற்பிக்கவும் ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டிற்காகவும் இவ்வில்லத்தைப் பயன்படுத்தினர். அச்சமயத்தில் இப்பள்ளியின் தலைமையாசிரியராக திரு.எம்.அந்தோணிசாமி அவர்களும், நிருவாகத்தின் தலைவராக சங்.குரு அவே அவர்களும் சேவையாற்றினார்கள்.

1928-இல் புதிய கத்தோலிக்கத் தேவாலயம் கட்டப்பட்டு அதில் வகுப்புகளும் நடத்தப்பட்டன. மாணவர்களின் எண்ணிக்கையும் 50ஆக உயர்ந்தது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் இவ்வெண்ணிக்கை 70ஆக உயர்ந்தது. 1938-இல் கத்தோலிக்கத் தேவாலயத்துக்கு அருகில் மூன்று வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடமாக "கான்வெண்ட்" ஆங்கிலப் பள்ளிக் கட்டப்பட்டு, வகுப்புகள் யாவும் அங்கேயே நடத்தப்பட்டன. 1945-இல் இரண்டாம் உலகப்போருக்குப் பின் இவ்வாங்கிலப்பள்ளி தைப்பிங்கிற்கு மாற்றப்பட்டது.

1946- ஆம் ஆண்டில் இக்கட்டிடம் முழுமையாக தமிழ்ப் பள்ளிக்காகவே கொடுக்கப்பட்டது. 1957- இல் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய திரு.எஸ்.சபாரத்தினம் அவர்கள், டென்னிஸ்டவுன் தோட்டத் தமிழ்ப்பள்ளியையும் இத்தமிழ்ப்பள்ளியோடு இணைப்பது நல்லதெனவும், அதற்கான அமலாக்கத்திற்குத் தம்மால் இயன்ற அனைத்து உதவியையும் செய்யத் தயாரெனவும் உறுதியளித்தார்.

இத்திட்டம் முழுமையாக நிறைவேற நான்காண்டுக் காலம் ஆனது. மாணவர்களின் எண்ணிக்கை மென்மேலும் உயர்ந்ததினால், நமது அரசாங்கம் இரண்டு வகுப்பறைகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தை (60'X25') 1961-இல் கட்டிக் கொடுத்தது. இதனைத்தொடர்ந்து 08.03.1961 அன்று டென்னிஸ்டவுன் தோட்டத் தமிழ்ப்பள்ளியோடு இணைந்தது மட்டுமின்றி நிபோங் திபாலை அடுத்துள்ள டிரான்ஸ் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளியிலிருந்து நான்காம் வகுப்பைச் சேர்ந்த 15 மாணவர்கள் இப்பள்ளிக்குப் பயில வந்தனர்.

1981-ஆம் ஆண்டு செயிண்மேரி தமிழ்ப்பள்ளி எனும் பழையப் பெயர் “செயிண்மேரி தேசிய வகை தொடக்கத் தமிழ்ப்பள்ளி” எனும் புதிய பெயர் பெற்றது. 1991-இல் பாரிட் புந்தார் ம.இ.கா கிளையின் உதவியால் நான்கு வகுப்பறைகளைக் கொண்டு இணைக்கப்பட்டது.

அந்த இணைக்கட்டடம் பள்ளியாகச் செயல்பட்ட 9 ஆண்டுகளுக்குப் பின், கத்தோலிக்கத் திருச்சபைக்கு இடம் தேவைப்பட்டதால் இணைக்கட்டடம் அமைந்திருந்த இடத்தைத் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே, ம.இ.கா பாரிட் புந்தார் கிளையின் முயற்சியில் பள்ளிக்கு நிலம் வாங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தவிர்க்கவியலாத காரணத்தால் அத்திட்டம் நிறைவடையாமல் போனது. தலைவராக சங்.குரு அவே அவர்களும் சேவையாற்றினார்கள்.

அக்காலக்கட்டத்தில் பொறுப்பேற்ற பள்ளியின் பெ.ஆ.சங்கத்தின் புதிய நிருவாகம் நிலத்தை வாங்கி பள்ளியை அமைக்கும் முயற்சியைத் தொடர்ந்தது. அந்தத் தருவாயில் அரசாங்கம் பள்ளிக்கென புதியக் கட்டடம் ஒன்றை அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்தது.

அதன் அடிப்படையில் 2002-ஆம் ஆண்டில் பாரிட் புந்தாரில் அமைக்கப்பட்ட வாவாசான் பள்ளி வளாகத்தில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளிக்குத் தனிக்கட்டடம் ஒதுக்கப்பட்டது. அவ்வாண்டு சூன் மாதம் தொடங்கி வாவாசான் பள்ளி வளாகத்தில் செயிண்ட் மேரி தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இன்றைய நிலையில், கிரியான் மாவட்டத்திலேயே மிகப் பெரிய பரப்பளவைக் கொண்டு, மிக நவின கட்டடத்தில் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி செயல்படுகிறது. தற்போது 375 மாணவர்களோடும் 25 ஆசிரியர்களோடும் இயங்கிக்கொண்டிருக்கிறது. பள்ளியின் தலைமையாசிரியராக திரு.இரா.கோவிந்தராஜு பணியாற்றுகின்றார். கல்வித்துறையிலும் புறப்பாடத்திலும் இப்பள்ளி குறிப்பிடத்தக்க வளர்ச்சிகளைக் கண்டுவருகிறது.

மேலும், இப்பள்ளி பல வசதிகளை நிறைவாகக் கொண்டுள்ளது. பேரணி மண்டபம், அறிவியல் கூடம், வாழ்வியல் கூடம் போன்றவற்றை தவிர, ஆசிரியர் அறை, அலுவலகம், நூலகம், கணினிக்கூடம், நடவடிக்கை அறை போன்றவை குளிர்சாதன வசதிகளுடன் அமைந்துள்ளன. திரு.க.முருகையன் தலைமையில் பெ.ஆ.சங்கத்தின் முயற்சியினால், கடந்த 2008ஆம் ஆண்டில், சற்றேறக்குறைய RM20,000 செலவில் தேவையான நூல்கள் வாங்கப்பட்டு பள்ளி நூலகம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தவிர, பெ.ஆ.சங்க முயற்சியால் இரண்டு வாசிப்புக் கூடங்களும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

செயிண்மேரி தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கென தனியாக ஒரு சிற்றுண்டிச் சாலை அமைப்பதற்கும், மேலும் ஒரு பாலர் பள்ளியை ஏற்படுத்துவதற்குமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. படிப்படியாக வளர்ச்சியை நோக்கி பீடுநடைபோட்டுள்ள செயிண்மேரி தமிழ்ப்பள்ளி, தொடர்ந்து பல சாதனைகளையும் வெற்றிகளையும் குவித்து, விரைவிலேயே மாவட்டத்தில் மட்டுமின்றி மாநில நிலையிலும் மிகச் சிறந்த பள்ளியாக உருவாகும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.

0 comments: