அறிவிப்பு:-

யுபிஎசார் தேர்வு 2015

08-10 செப்டம்பர் 2015


தலைமையாசிரியர் உரை

செயிண்மேரி தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர்
திரு.இரா.கோவிந்தராஜு அவர்களின்
அறிமுக உரை



தாய் வாழ்க!
அவள் தந்த தமிழ் வாழ்க! வணக்கம்.

கணினியும் இணையமும் இன்று எல்லாத் துறைகளிலும் நீக்கமற ஊடுறுவி இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் இன்று விரிவாகவும் வேகமாகவும் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஏற்ப நாமும் நம்முடைய அறிவையும் ஆற்றலையும் விரிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இல்லையேல், நாம் பின்தங்கிவிட நேரிடும்.


இந்த உண்மையை உணர்ந்ததன் வாயிலாக, செயிண்மேரி தமிழ்ப்பள்ளி இணையத்தோடு கைகோர்த்து செல்லவேண்டும் என விரும்பினேன். அதற்கு, செயிண்மேரி தமிழ்ப்பள்ளிக்குத் தனியாக இணையத் தளம் தொடங்க வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாக என் மனதில் இருந்தது. பலமுறை பள்ளி ஆசிரியர்களிடம் இதைப் பற்றி பேசியிருக்கிறேன்; கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.

என்னுடைய அந்த ‘இணையக் கனவு’ இப்போது நிறைவேறி இருக்கிறது. செயிண்மேரி தமிழ்ப்பள்ளியின் இணைய வலைப்பதிவு (Weblog) இப்போது உருவாகி இருக்கிறது. “2010 வாக்கில் பேரா மாநிலத்திலேயே சிறந்த தமிழ்ப்பள்ளியாக உருவாக வேண்டும்” என்ற பள்ளியின் குறிக்கோளுக்கு ஏற்ற வகையில் இந்த வலைப்பதிவு உருவாக்கம் அமைந்திருக்கிறது.

‘வெளிச்சம்’ என்னும் பெயரில் இந்த வலைப்பதிவு இயங்கவுள்ளது. velichamnet.blogspot.com என்பது இதன் முகவரியாகும். ஏற்கனவே, ‘வெளிச்சம்’ என்ற பெயரில் பள்ளியின் செய்தி மடல் வெளிடப்பெறுகிறது. அது அச்சு வடிவில் பெற்றோருக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இப்போது  ‘வெளிச்சம்’ என்னும் அதே பெயரில் இணையப் பதிப்பாக இந்த வலைப்பதிவு அறிமுகமாகிறது.

பள்ளி தொடர்பான விவரங்கள், பள்ளி நிகழ்ச்சிகள், செயற்பாடுகள் பற்றிய செய்திகளும் படங்களும் ‘வெளிச்சம்’ வலைப்பதிவில் இடம்பெறும். செயிண்மேரி தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மாணவர்கள் ஆகிய தரப்பினருக்குத் தேவையான தகவல்கள் இதில் உள்ளடக்கமாக இருக்கும். இதன்வழி, அனைவருக்கும் உடனடியாகத் தகவல்கள் சென்று சேரும் வாய்ப்பு ஏற்படும்.

இன்றைய பெற்றோர்களும் மாணவர்களும் இணையத்தை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்கள் செயிண்மேரி தமிழ்ப்பள்ளி தொடர்பான தகவல்களை உடனடியாக எட்டுவதற்கு இந்த வலைப்பதிவு மிகவும் பயன்படும். அதுமட்டுமல்லாது, பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், பள்ளியோடு தொடர்புகளை வைத்துக்கொள்ளவும் இது பயன்படும்.

இறுதியாக, செயிண்மேரி தமிழ்ப்பள்ளி தொடர்பான தகவல்கள், விவரங்கள், நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் என அனைத்தையும் இந்த வலைப்பதிவில் பெற்றுக்கொண்டு, பயனடையுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


நன்றி, வணக்கம்.

அன்புடன்,
இரா.கோவிந்தராஜு
தலைமையாசிரியர்,
செயிண்மேரி தமிழ்ப்பள்ளி, பாரிட் புந்தார், பேரா.